"நான் யாருக்கும் பயப்படுபவனுமல்ல" காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படும் அமைச்சரவை உறுதியாகவுள்ளது என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி
‘யார் எதிர்த்தாலும் இலங்கையில் காதி நீதிமன்றங்கள் இல்லாதொழிக்கப்படவுள்ளன. முஸ்லிம்களின் விவாகரத்து உட்பட குடும்ப விவகாரங்களை பொது நீதிமன்றங்களே கையாளவுள்ளன. இதற்கான அனுமதியை அமைச்சரவை ஏகமனதாக வழங்கியுள்ளது. 30 பேர் கொண்ட அமைச்சரவையில் நான் ஒருவனே முஸ்லிம். அதுவும் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவனல்ல. நான் தேசியப் பட்டியல் உறுப்பினர்’ என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
காதி நீதிபதிகள் போரத்தின் நிர்வாகிகளுடன் சூம் செயலியூடாக மேற்கொண்ட கலந்துரையாடலின் போதும், தமிழ் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
"காதி நீதிமன்ற முறைமையை தக்க வைத்துக்கொண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கே நான் தீர்மானித்திருந்தேன். ஆனால் அமைச்சரவை முஸ்லிம்கள் ஏனைய பொது நீதிமன்றத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டுமென்றும் முஸ்லிம்களுக்கு தனியான சட்டம் தேவையில்லை எனவும் பலதார மணம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும் உறுதியான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்தை என்னால் மீற முடியாது.’ என்றார்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை திருத்த வேண்டும் என பலர் கூறுகிறார்கள். இதேவேளை ஒரு தரப்பினர் இச்சட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை என்கிறார்கள். ஆனால் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கும், காதி நீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இச்சட்டம் அமுலாக்கப்படும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனை எவராவது ஏற்றுக் கொள்ளாவிட்டால் உயர் நீதிமன்றுக்குச் செல்லலாம்.
நான் எடுத்த தீர்மானத்தை இலேசாக கைவிடுபவனல்ல. நான் யாருக்கும் பயப்படுபவனுமல்ல. எங்களது அரசாங்கம் பற்றி எல்லோருக்கும் தெரியும். சிங்கள பௌத்தர்கள் 98 – 99 வீதத்தினர் எங்களுக்கு வாக்களித்தார்கள். இலங்கையர் என்ற அடையாளத்தின் மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர்களே. இதற்காகவே நாம் போராடுகிறோம்.” என்றார்.
(Vidivelli)
No comments
Thanks for reading….